கொரோனா தடுப்பு என்ற பெயரில் அரசுகள் எடுக்கும் நடவடிக் கைகள் பல கேள்விகளை எழுப்புகின்றன. இதற்கு தமிழகமும் விதிவிலக்கு அல்ல.
இது குறித்து ஆளும் அ.தி.மு.க.செய்தித் தொடர்பாளரும், சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞருமான சிவங்கரியிடம் பேசினோம்.
‘‘கொரோனாவில் இருந்து மக்களைக் காக்க தமிழக அரசு முழு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. முதல்வர் இ.பி.எஸ். தலைமையில் தொடர்ந்து கூட்டங்கள் நடைபெற்று தடுப்பு முறைகள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன.
உதாரணமாக தமிழகத்தின் தலைநகர் சென்னையை எடுத்துக்கொள்வோம். மாநிலத்திலேயே அதிக மக்கள் வாழும் பகுதி இது. ஆகவே நோய்த் தொற்று பரவ அதிக வாய்ப்பு உண்டு. அதனால் இங்கு மண்டலவாரியாக கொரோனா தடுப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
சென்னையில் மட்டும் 4,000 படுக்கைகள் வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக உரிய மருந்துகள் அளிக்கப்படுகிறது. தவிர, கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. 50 பரிசோதனை மையங்கள் மூலம் நாளொன்றுக்கு 12,000 பேருக்கு சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பிற மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு பணிகளை தமிழக அரசு சிறப்புற நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்ட ஆட்சியருடனும் நேரடியாக முதல்வர் ஆலோசனை நடத்தி, அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்தியாவிலேயே மிக அதிகமான பரிசோ தனைகள் நடப்பது தமிழகத்தில்தான். கொரோனா நோயாளிகளிக்கு தினசரி
சத்துள்ள உணவு அளிக்கவே தினசரி 25 கோடி ரூபாய்களை தமிழக அரசு செலவிட்டு வருகிறது. இதை வைத்தே தமிழக அரசின் செயல்பாடு எப்படி உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே தமிழக அரசு மீது குற்றம் சுமத்துகின்றன. ஆளும் அரசுக்குத்தான், மாநிலத்தின் அனைத்து நிலவரங்களும் தெரியும். சரியான நவடிக்கைகளையும் எடுக்க முடியும். ஆனால் இதை உணராமலோ அல்லது உணர்ந்தோ எதிர்க்கட்சிகள் தவறாக விமர்சிக்கின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு - மீண்டும் மக்களிடம் வாக்கு கேட்டு செல்ல இருக்கும் அரசு, மக்களை வதைக்குமா?'' என்றார் அவர்.
- தமிழ் இனியா
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கூட்டணி நிலவரம் குறித்து உரையாடினோம்.
‘‘தமிழகத்தைப் பொருத்தவரை தேசிய ஜனநாயக்கூட்டணியில் அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணி நிச்சயமாக வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என்றுதான் சொல்லவேண்டும். மேலும் சில கட்சிகளும் கூட இந்த கூட்டணியில் எங்கள் கொள்கைகளை ஏற்று இணையலாம். இந்த கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் கொள்கை அடிப்படையில் மோதல்கள் உரசல்கள் ஏற்படுவது சகஜம்தான். அப்படித் தான் அதிமுகவுடன் எங்களுக்கு ஏற்படும் உரசல்கள் கருத்துவேறுபாடுகளைப் பார்க்கவேண்டும்.
ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கைகளில் வித்தியாசம் உண்டு. ராஜிவ்காந்தி கொலையாளிகள் விஷயத்தில் காங்கிரஸ் திமுக இடையில் வேறுபாடு உள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினர் விஷயத்தில் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் இடையே மாறுபாடு உண்டு.இப்படித்தான் கூட்டணிக் கட்சிகளுக்குள் ஏற்படும் முரண்பாட்டையும் பார்க்கவேண்டும்.
உண்மையைச் சொல்லவேண்டுமானால் எந்த கட்சியாக இருந்தாலுமே ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணம்தான் முக்கியக் கொள்கையாக இருக்கும். எங்கள் கட்சி ஆட்சி அமைத்தால்தான் நாங்கள் விரும்பும் மக்கள் நலன்களை உருவாக்கும் திட்டங்களைச் செயல்படுத்த முடியும். ஆனால் அவ்வப்போது நிலவும் சூழலைப் பொறுத்துத்தான் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறோம். நிலைப்பாடுகளைப் பொறுத்து ஆதரவு தெரிவிக்கிறோம். இந்த பின்னணியில் தான் எங்கள் கட்சித் தலைவர்கள் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் விருப்பத்தைத் தெரிவிக்கும் கருத்துகளைப் பார்க்கவேண்டும்.
புதிய கல்விக்கொள்கை, சுற்றுச்சூழல் பாதிப்பு வரைவு அறிக்கை, வேலைவாய்ப்புக்கு ஒரே தேர்வுமுறை என எதுவாக இருந்தாலும் தமிழ்நாட்டில் எதிர்ப்புகிளம்புகிறதே? இது உங்கள் வெற்றிவாய்ப்புகளைப் பாதிக்காதா? தேர்தலை அணுகுவதற்கும் இந்த திட்டங்களுக்கும் சம்பந்தமே இல்லை. நம் மாநிலத்தில் எல்லாமுமே அரசியல் மயமாகி விட்டது. சினிமா முதல் ரியல் எஸ்டேட் வரை அனைத்து பொருளாதாரமும் அரசியல்வாதிகள் கையில்தான். இந்த நிலையில் மொழி போன்ற உணர்வு சார்ந்த பிரச்னைகளைத் தூண்டிவிட்டு மக்களை மழுங்கடித்து வைத்துள் ளார்கள். இங்கே இவற்றை எல்லாம் சமாளிக்க தேவையான இளைஞர்கள் சமூக ஊடகங்கள் மூலம் எங்களோடு இணைந்து பணியாற்றி வரத் தொடங்கி இருக்கிறார்கள். இது எங்களைப் பொருத்தவரையில் நேர்முகமான வளர்ச்சி.
- மதிமலர்
இந்த கொரோனா காலத்திலும் நீட் தேர்வுகளை நடத்த தேதிகளை அறிவித்துள்ளது மத்திய அரசு. இது தொடர்பாக திமுகவின் ஐ.டி பிரிவு மாநில துணைச்செயலாளர் புதுகை அப்துல்லாவிடம் பேசியதிலிருந்து:
‘‘நீட் தேர்வு மட்டுமல்ல எங்கள் எதிர்ப்பு... பொறியியல், மருத்துவ நுழைவுத்தேர்வுகளுமே திமுக ஆட்சியில்தான் ரத்து செய்யப்பட்டன. பனிரெண்டாம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்கள் இருக்கையில் அதைத்தாண்டி இன்னொரு தேர்வு எதற்கு என்றுதான் இந்த ரத்து முடிவு கொண்டுவரப்பட்டது. ஏனெனில் பள்ளிகளில் பாடங்கள்தான் நடத்தப்படும். நுழைவுத்தேர்வுக்கு என்று தனியாக பயிற்சி நடத்தமாட்டார்கள். இதனால் முன்பெல்லாம் இதற்காகவே நுழைவுத்தேர்வு பயிற்சி வகுப்புகள் ஒரு பெரும் வணிகமாக தமிழ்நாட்டில் நடைபெற்றுவந்தன. இப்படி நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களாக நடத்தப்பட்டவை பின்னர் பள்ளிகளாகவும் மாறின. வசதி படைத்தவர்கள் மட்டுமே இப்படி பயிற்சி எடுத்து பாஸ் பண்ண முடிகிற நிலை இருப்பதால்தான் இந்த நுழைவுத்தேர்வுகள் நீக்கப்பட்டன. அதைப்போல் நகரத்தில் படிக்கும் மாணவர்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் கிராமத்து மாணவர்களுக்கு இல்லை என்பதால் சிறப்பு ஒதுக்கீடுகள் கொண்டுவரப்பட்டன. சமவாய்ப்பு வழங்குவதற்கான ஏற்பாடு. இது. இதுதான் சமூக நீதி. இப்படிப்பட்ட சூழ்நிலையில்
நீட் தேர்வு கொண்டுவரப்படுகிறது. அப்போதே ஆரம்ப நிலையிலேயே இது பெரிய அயோக்கியத்தனம் என்று அகில இந்திய அளவில் குரல் கொடுத்தது திமுக. அன்றைக்கு ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பலரும் ஈடுபட்டிருந்தபோது திமுகதான் தமிழகம் தழுவிய நீட் எதிர்ப்பு மனித சங்கிலி போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது. அன்று நாம் சொன்ன போது பலருக்குப் புரியவில்லை. ஆனால் இன்று நமக்கு நீட் தேர்வு மையங்கள் மாநிலத்துக்கு வெளியே போடப்படுகின்றன. போனமுறை ஒரே ஒரு மாணவர் மட்டும்தான் அரசுப்பள்ளியில் இருந்து மருத்துவம் படிக்க தேர்வாகினார்.
இந்த கொரோனா காலத்திலும் நீட் தேர்வை நடத்த அரசு முயல்வது கொடூரமான நிலைப்பாடாகும். தமிழக அரசு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஏழரை சதவீதம் மருத்துவப்படிப்பு சேர்க்கையில் ஒதுக்கீடு தருவதாகச் சொல்கிறது. ஆனால் இந்த சட்டத்துக்கு மத்தியில் இருப்பவர்கள் அனுமதி தருவார்களா?
நீட் வேண்டாம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு அனுப்பினார்களே? அதை காகிதம் என்ற அளவில் கூட மத்தியில் இருப்பவர்கள் மதிக்கவில்லையே..?''
- மதிமலர்
செப்டெம்பர், 2020.